வடபுலத் தமிழர்களின் மாட்டுவண்டிச்சவாரியும் தமிழர் பாரம்பரியமும்.
வன்னியில் பிறந்து வளர்ந்து முப்பது வயதைத் தாண்டிய எனக்கு மாட்டுவண்டிச்சவாரியை எனது முப்பதாவது வயதில் இருந்துதான் கண்டு ரசித்து கொண்டுவருகிறேன் என்பது ஒருவகையில் வருத்தமளித்தாலும், நூல்களின் வழியிலும், பயணங்களின் மூலமும், ஏனைய ரசனை மட்டங்களைக் கொண்டும் உயர்வான நிலையில் கலைகளின் ஊடாக மனதை லயிக்கத் தெரிந்த எனக்கு மாட்டுவண்டிச் சவாரி மீது ஆர்வம் ஏற்பட்டது என்பது அந்தப் பாரம்பரிய விளையாட்டின் முக்கியத்துவம், தமிழர்களின் ஒன்றுகூடும் விதம் என்பவற்றைப் பார்க்கும் போது எனக்கு இன்னொரு வகையில் பெருமகிழ்வை ஏற்படுத்தியுள்ளது என்றே கருதமுடிகிறது. மிகநீண்ட காலமாக இலக்கிய வாசிப்புக்கள், இயற்கையைப் புகைப்படமாக்கல், பயணங்கள் என்று நகர்ந்து கொண்டிருந்த எனக்கு இவை மூன்றும் வழங்கும் உற்சாகத்தினை இந்தச் சவாரித்திருவிழாவும் ஏற்படுத்துகின்றது என்றே கூறவேண்டும். சங்க இலக்கியங்களில் ஏறு தழுவுதல் என்ற விடயம் கலித்தொகை, ஐங்குறுநூறு போன்ற தொகை நூல்களின் செய்யுட்களால் அறிந்து கொள்ள முடிகிறது. "கொல்லேறு சாட இருந்தார்க்கு எம் பல்லிரும் கூந்தல் அணை...