2016/17 சாகித்ய அகடமி விருது வண்ணதாசனுக்கு

வாழ்த்துக்கள் வண்ணதாசன் என்கின்ற 'கல்யாண்ஜி' க்கு.
=============
இந்த இரண்டு பெயருமே ஒருத்தருடையது தான். அவர் தான் சி.கல்யாணசுந்தரம். வண்ணதாசன் என்றவுடன் சிறுகதைகளும், கல்யாண்ஜி என்றவுடன் கவிதைகளும்தான் ஞாபகம் வருகின்றது. வண்ணதாசனை விரும்பியதை விடவும், கல்யாண்ஜியை அதிகம் நேசித்துள்ளேன். கவிதைகள் மீதான பெருவிருப்பு அதற்குப் பெருங்காரணமாக இருக்கலாம்.
அவர்தம் கவிதைகளின் சிறப்பாகப் பின்வரும் அம்சங்களைக் கருதுதலாம்.
1. வசனத் தெறிப்பு.
2. கவிதைகளின் பரந்த பொருள்.
3. மனிதநேய Elements.
4. தடாலடியாக மாறும் கவிதையின் கோலம்.
5. அடிகடந்தும் நீளும் வாக்கியம்/பொருள் - Like Enjambment.
6. மனிதப் பண்புகளை அஃறிணையுடன் ஏற்றிச் சொல்லுதல்- Personification.
7. Sentence Structure.
8. பிரமிப்பை உண்டாக்குதல்.

கலைமாமணி, விஷ்ணுபுரம் விருதுக்கு பிறகு சாகித்ய அகடமி விருது (2016/2017) பெறுகின்றார். அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.  "ஒரு சிறு கதை" என்ற சிறுகதைத் தொகுப்புக்கு  சாகித்ய விருது பெற்றிருந்தாலும், அவரது கவிதையைப் பற்றியே பேசுகின்றேன். ஏனெனில் தற்சமயம் அவரது சிறுகதைகள் பற்றி ஏராளமானவர்கள் பேசியும், எழுதியும் கொண்டிருப்பார்கள். கவிதையைப் பற்றி  நாமும் கொஞ்சம் பேசுவோம் என்றொரு வேட்கை.

'கல்யாண்ஜி' இன் பத்துக் கவிதைகள்.

1. குற்றவுணர்வுகள் ஏதுமில்லை
சந்தோஷமாகவே இருக்கிறது
ஆனாலும் அவள் என்கனவில் வந்ததை
இவளிடம் சொல்லமுடியவில்லை.
இவளுக்கும் இருக்கலாம்
குற்றவுணர்வுகள் அற்ற
சந்தோஷம் தந்த
என்னிடம் சொல்ல முடியாத
இவள் அவனிடம் பேசுகின்ற கனவுகள்.
அவளைப்பற்றி இவளிடம் சொல்லாமல்
அவனைப்பற்றி என்னிடம் சொல்லாமல்
இவளும் நானும்
இருக்கின்றோம்
சந்தோஷமின்றி, குற்றவுணர்வுகளுடன்.

2. நீ வருவதற்காக
காத்திருந்த நேரத்தில்தான்
பளிங்கு போல்
அசையாதிருந்த தெப்பக்குளம்
பார்க்க ஆரம்பித்தேன்.
தலைகீழாய் வரைந்து கொண்ட
பிம்பங்களுடன்
தண்ணீர் என் பார்வையை
வாங்கிக் கொண்டது முற்றிலும்;
உன்னை எதிர்பார்ப்பதையே
மறந்து விட்ட ஒரு கணத்தில்
உன்னுடைய கைக்கல் பட்டு
உடைந்தது
கண்ணாடிக்குளம்.
நீ வந்திருக்க வேண்டாம்
இப்போது.

3. தினசரி வழக்கமாகிவிட்டது
தபால்பெட்டியைத்திறந்துபார்த்துவிட்டு
வீட்டுக்குள் நுழைவது.
இரண்டு நாட்களாகவேஎந்தக் கடிதமும் இல்லாதஏமாற்றம்.
இன்று எப்படியோஎன்று பார்க்கையில்
அசைவற்று இருந்தது
ஒரு சின்னஞ்சிறுஇறகு மட்டும்
எந்தப் பறவைஎழுதியிருக்கும்
இந்தக் கடிதத்தை.

4. சைக்களில் வந்த
தக்காளி கூடை சரிந்து
முக்கால் சிவப்பில் உருண்டது
அனைத்து திசைகளிலும் பழங்கள்
தலைக்கு மேலே
வேலை இருப்பதாய்
கடந்தும் நடந்தும்
அனைவரும் போயினர்
பழங்களை விடவும்
நசுங்கி போனது
அடுத்த மனிதர்கள்
மீதான அக்கறை.

5. " பேசும் பார் என் கிளி " என்றான்
கூண்டைக் காட்டி.
அந்தக் கிளிக்கு வால் இல்லை.
வீசிப் பறக்கச் சிறகில்லை.
வானம் கைப் பட வழியே இல்லை .
" பேசும் ! இப்போது பேசும் பார் !"
என மீண்டும் மீண்டும் அவன் சொல்ல . . .
" பறவை" என்றால்
" பறக்கும் " எனும்
பாடம் முதலில் படி! என்றேன்.

6. உன்னுடைய கைகள் தானே,
வேறு யாருடைய கைகளோ போல
பார்க்கிறாயே - என்றான்.
என்னுடைய கைகளைத் தான்
வேறு யாருடைய கைகளையோப்போல
பார்க்கிறேன்.
என்னுடையதை
என்னுடையதாகப் பார்ப்பதில்
என்ன இருக்கிறது?.

7. கருப்பு வளையல்
கையுடன் ஒருத்தி
குனிந்து
வளைந்து
பெருக்கிப் போனாள்.
வாசல் சுத்தமாச்சு.
மனசு குப்பையாச்சு.

8. நீ இருக்கும்
திசைக்கு முகம்காட்டி
உன் சதுரமான
எதிர்பார்ப்பின் மேல்
பூக்காது
தொட்டிப்பூ
பூப்பூத்தல் அதன் இஷ்டம்
போய்ப் பார்த்தல் உன் இஷ்டம்.

9. குளிருட்டப்பட்ட,
மென்வெளிச்சமுடைய
உணவகத்தில் அவளைப் பார்த்தேன்.
படிந்திருக்கும் ரத்தக் கறையைத்
துப்புரவாக்குவது போல,
கைகளைக் கழுவினாள்.
பாவங்களைத் துடைப்பதாக
விரல்களை உலர்த்தினாள்.
இவ்வளவு கழுவ
இவ்வளவு துடைக்க ஒன்றுமில்லாத
எச்சில் வாழ்வுடன்
நான் காத்திருக்கும்போது
அவள் வெளியேறிக்கொண்டிருந்தாள்
வாள் ஒன்று வீசப்பட்ட
கச்சிதத்துடன்.

10. ரயில் வண்டியின் குலுங்குகிற
ராத்திரி விழிப்பில்
கண்ணாடி ஜன்னல் வலி
கலங்கி தெரிந்தது
நீரற்று ஆற்று மணல் மேல் நிலா.
மரணத்திலிருந்து
தாபித்த கண்கள்
மருத்துவமனைக் கட்டிலில்
உறங்க,
கணக்கும் மனதுடன்
நிசியில் வெளிவந்தது நின்ற பொழுது
வேப்பமர கிளைகளுக்கிடையில்
நிலா அசைந்தது.
தானாக இப்படி
தட்டுப்பட்டது தவிர
நிலா பார்க்க என்று போய்
நிலா பார்த்து நாளாயிற்று.

-- ::கல்யாண்ஜி கவிதைகள். Vannadasan Sivasankaran S
===
சுயாந்தன்.

Comments

Popular Posts