காலம் மையம் கொள்வதில்லை.

காலம் மையம் கொள்வதில்லை.
=======
கடிகாரமுள்ளாக மேகம் நகரத்தொடங்குகிறது.
சில மின்னல்கள்
"ஒன்றுக்கும் பன்னிரண்டுக்கும்"
இடைப்பட்ட தூரத்தை அசாதாரணமாகக் கடந்து செல்கின்றன.

நிமிடமுட்களின் வழியே
சொரிந்த நீரினை
அள்ளிப் பூஞ்செடியின்
இலைகளில் சும்மா
வைத்துவிடுகிறேன்.
மணிமுட்களில் வெள்ளம்
வழிந்தோடுகிறது.
அது இரவுகளின் தொடர்ச்சியைத்
தன்னுள் தக்கவைத்து
ஒரு நதியையும்
உண்டாக்கிவிடுகின்றது.

கடிகார மையத்தின் அச்சாணி
ஒரு புள்ளியில் நின்றுவிடாது
காலத்தையும், மேகத்தையும்
சுழற்றியபடி ஒரு யுகத்தைக் கடந்துபோகின்றது...
நானெல்லாம் வயதான
சிறுவன்போல இன்றும்
இளநரையுடன் பூஞ்செடிகளுக்கு
நீர்வார்த்துக் கொண்டிருக்கிறேன்.

Comments

Popular Posts