யுவன் சந்திரசேகரின் பிரத்தியட்சப் பிரமாணம்.


கிளியென்று சொன்னால்
பறவையைக் குறிக்கலாம்.
பச்சையைக் குறிக்கலாம்.
மூக்கைக் குறிக்கலாம்.
பெண்ணைக் குறிக்கலாம்.
கூண்டுச் சிறையைக் குறிக்கலாம்.
சமயத்தில் அது
கிளியையும் குறிக்கலாம்.

#யுவன்_சந்திரசேகர்.
====
யுவன் சந்திரசேகரின் இக்கவிதையை ஒரு கட்டுரைக்கான உத்வேகம் என்றும் கூறலாம். அல்லது ஒரு கட்டுரையினை எழுதி முடிப்பதற்கான மிகமிக எளியமுறையினாலான வழிகாட்டல் என்றும் கூறலாம்.

புரியும்படி கூறினால், சிறுவயதில் பாடசாலையில் வாத்தியார்கள் எங்கள் வீட்டுச் செல்லப் பிராணியைப் பற்றிப் 10 வசனம் எழுதச்சொல்வார்கள். நாமும் ஆரம்பத்தில் அதைப்பற்றி ஒன்பது வசனம் எழுதிவிட்டுப் பத்தாவதாக "நான் எனது செல்லப்பிராணியை நான் மிகவும் நேசிக்கிறேன்" என்ற வசனத்தை இட்டுமுடிப்போம். அதுபோலத்தான் இக்கவிதையும்,
கிளி பற்றிய 'ஐந்து' ஆரம்பக் குறிப்புக்களை லாவண்யத்துடன் கூறிவிட்டு, இறுதி முடிப்பாக கிளியின் பிரத்தியட்சப் பிரமாணம் கூறப்படுகிறது. இங்கு பிரத்தியட்சம் என்பதைச் சுயதெளிவு(Self-Evident) என்று மட்டுமே நிறுவவியலும். அதற்காக "சமயத்தில்" என்ற சொல் ஒன்றே போதுமாகவுள்ளது.
கிட்டத்தட்ட ஒரு கட்டுரைப் பாணியில்.

அநேகமாக நாம் நாமாக இருப்பதில்லை. நம்மை நாமே பிறிதாகச் சித்திரித்தபடியிருப்போம். அந்தச் சித்திரிப்புக்கள் சில எல்லை வரை சென்று "சமயத்தில்" ஒரு தெளிவுண்டானதும் நம்மை நாமக உணர்வதுண்டு. அதுதான் இக்கவிதையின் மற்றொரு பார்வை.

இதுபோலும் நிறையக் கவிதைகள் இதே பொருளில் பிறரால் எழுதப்பட்டு இருப்பினும், இது சற்றே மாறுபட்ட திரும்பிச்செல்லும் பூரணத்துவத்தை விகாசப்படுத்துவதாக உள்ளது.

Comments

Popular Posts