Descriptive Poem.


தொடர்ச்சியாக ஏன் சேரனின் கவிதைகளையே முகநூலில் பதிவிடுகிறீர்கள் என்று ஒருவர் கேட்டிருந்தார். அது ஏன் என்பதற்கான பதிலை நான் கூறுவதைவிடச் சேரனின் கவிதையே கூறும்.
=====
கேள்.
=====
எப்படிப் புணர்வது என்பதைப் பாம்புகளிடம்.
எப்படிப் புலர்வது என்பதைக் காலையிடம்.
பொறுமை என்பது என்ன என்பதை மரங்களிடம்.
கனவுகளுக்கு வண்ணங்கள் உண்டா என்பதைத் தூக்கத்தில் நடப்பவர்களிடம். கண்ணீர்த்துளிகள் சிறைக்கூடங்களாக மாறியது எப்படி என்பதை அகதிகளிடம்.
பயம் என்பது என்ன என்பதை நடு இரவில் இந்த நகரில் நடக்க நேர்கிற கறுப்புத்தோல் மனிதர்களிடமும் பெண்களிடமும்.
மோகம் முப்பது நாள்கள்தானா என்பதை மூக்குத்தி அணிந்த காதலர்களிடம்.
முழுநிலவில் பாலத்தின் கீழ் உறைந்த பாற்கடலின் பாடும் மீன்கள் எங்கே போய் விட்டன என்பதைக் கார்காலத்திடம். மொழியின் தனிமையிலிருந்து பிறப்பது என்ன என்பதைத் திசை தொலையப் புலம் பெயர்ந்தவர்களிடம்.
துயரத்தின் சாறு பிழிந்த தனிமை எப்படியிருக்கும் என்பதை என் பனிப்பாறையுள் நெருப்பின் உயிர்ச் சுவட்டை எறிந்தவளிடம். அவளிடம் இவளிடம்.
இரவின் கடைசி  ரயிலும் போய்விட்ட பிற்பாடு தண்டவாளங்களும் குளிரில் துடித்துப் பிளக்க, ஒற்றைச் சிறகுடன் கையில் ஒற்றைப் பூவுடன் காத்திருப்பது எப்படி என்பதை என்னிடம் கேள்...
#சேரன்.
======
ஆகச்சிறந்த ஈழத்தமிழ்க் கவிதைகளில் இதுவுமொன்று.... சிலர் இதனை மிகச்சிறந்த காதல் கவிதையென்று கூறுவர். எனினும் இக்கவிதையை காதல்-யுத்தம் என்ற ஒரேவகைப்பாட்டில் கூட அடக்கிப் பார்க்கலாம்.....
1. துயரத்தின் சாறு பிழிந்த தனிமை.
2. நெருப்பின் உயிர்ச் சுவட்டை எறிந்தவள்.
3. தண்டவாளங்களும் குளிரில் துடித்துப் பிளக்க.

இக்கவிதை அசாதாரணமான ஒரு மொழியினை அடைகிறது, என்பதற்கு மேற்குறித்த மூன்று சொல்லாட்சியுமே சாட்சி.

காத்திருப்பையும், பிரிவின் கையறு நிலையையும் கூறுகின்ற இக்கவிதையினை அதன் ஆழீர்ப்பிலிருந்து 'Descriptive Poems' என்றுகூடக் கூறலாம். (பிரிவினையோ, காதலையோ ஆழ விபரிக்கிறது என்பதைவிடவும்...)
கவிதையானது தனக்கான வடிவத்தை வெவ்வேறாக எடுத்துக்கொண்டாலும், கூறவந்த கருத்தை ஒரேதளத்தில் நின்று ஒன்றுசேர்த்துக்  கூறிவிடக்கூடியது.
அதற்கு,
1. Rich Vocabularies.
2. Adept Writing Skills.
3. Vivid Imagination.
இம்மூன்றுமே மிகமுதன்மையானது. இம்மூன்றுமே அமைந்தகவிதை எது என்றால் மேற்சொன்ன 'கேள்' என்ற கவிதையைச் சுட்டலாம்.

சேரனின் கவிதைகள் உலக மொழிகள் பலவற்றில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
அதற்கான காரணம் மேற்சொன்ன மூன்றும்  என்றாலும், ஏதோ ஒரு இனம்புரியவே முடியாத சஞ்சலமும், சிலாகிப்பும் சேரனின் கவிதைகளைப் படிப்பவர்களுக்கு உண்டாகிவிடுகிறது. உதாரணமாக, அறுபது பயணிகளை ஏற்றக்கூடிய பஸ்ஸில் நூறு பேர் ஏறிப்போகும்போது  அதற்குள் ஒருவராக நாமிருக்கும்போது உண்டாகும் ஒருவித உணர்வாகவும் இருக்கலாம். சமயத்தில் அதே நூறுபேர் போன பஸ்ஸில் வெறும் நான்குபேரில் ஒருவராக நாமும் போகின்ற உணர்வின் லயிப்பாகவும் இருக்கலாம்.

நிச்சயமாக  சேரன் யாவராலும் கொண்டாடப்பட வேண்டியவர்தான்.  (அவர்மீதான விமர்சனங்களின் 'சீமெந்துச்சவல்களை' விறாந்தையில் வைத்துவிட்டுக் கொண்டாடுங்கள்...)

Comments

Popular Posts