"சிதைவுகளின் ஒழுங்கமைவு: சில புலியெதிர்ப்புப் பிரச்சனைப்பாடுகள்"

அனோஜனின் கட்டுரை வாசிக்கமுடிந்தது. அந்தக் கட்டுரைக்கு "சிதைவுகளின் ஒழுங்கமைவு: சில புலியெதிர்ப்புப் பிரச்சனைப்பாடுகள்" என்றே அவர் தலைப்பை வைத்திருக்கலாம்.
அவரும் அவரது புலி எதிர்ப்புக் கூட்டாளிகளும் அருமையாகவே இந்தக்கட்டுரையை விமர்சனமயப்படுத்தியும் திரிபுபடுத்தியும் எழுதியுள்ளனர். இந்தக் கட்டுரையின் விமர்சன யுக்தி பாராட்டுக்குரியது. ஆனால் உள்ளடக்கம் முழுமையாக நம்பகமானதில்லை. உதாரணமாக தொடக்கத்தில் வைத்தே தர்க்கத்தை ஆரம்பிக்கலாம்.
"இரண்டாயிரங்களின் பின்னர் தமிழில் நாவல்களே எழுதப்படவில்லை" இப்படி லஷ்மி மணிவண்ணனின் கருத்தை முன்வைத்தும் அதனை ஆதரித்துத் தொடங்கிய அனோஜன்தான் சில நாட்களுக்கு முன்பு ஒரு பட்டியல் போட்டார். பின்வந்த விவாதங்களில் சில சலசலப்புக்களைச் செய்தார். அதில் இரண்டாயிரங்களில் வந்த நல்ல நாவல்களையும் பரிந்துரைத்தார். ஆனால் இன்று லஷ்மி சரவணகுமார் மீதான வெறுப்பை உமிழ புலம்பெயர் புலி எதிர்ப்பு வாதிகளுடன் சேர்ந்து கள்ளத்தனம் ஆடுகிறார். அதிலும் குறிப்பாக புலிகள் சாதி வெறியர்கள் எனவும், ஷோபா சக்தி போன்றவர்கள் பிறப்பால் பஞ்சமர்கள் தலித்துகள் என்ற கட்டுக்கதைகளும் அனுதாப அலைகளும் தமிழக முற்போக்கு எழுத்துலகில் விதைக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாகவே கட்டுரையின் பிற்பகுதியைப் பார்க்கலாம்.
இதனை ஆட்காட்டியை இயக்கும் பிரசாத் தர்மு என்கிற நயவஞ்சக தமிழ்ப் புலியெதிர்ப்பு கார்பரேட்டும், முற்போக்கு என்றபெயரில் உள்ள சில அடிப்படைவாத உறுப்பினர் சிந்தனையாலும் உந்தப்பட்டு எழுதிய கட்டுரையாகவே பார்க்கலாம். இதன் முக்கியத்துவம் பாரதூரமானதல்ல.
இந்த இலக்கிய மேதாவிகளுக்கு புலியெதிர்ப்பு என்பது குறியீட்டு அர்த்தம் நிரம்பியதாம். அதுவும் ஒருபக்க நியாயம் கொண்ட குறியீட்டு வாதங்கள்.
புலிகள் ஸ்டாலினிய சர்வாதிகாரப் பாஸிஸ்ட்டுகள்தான். ஜனநாயக மறுப்பாளர்கள்தான். புலிகள் எதிர்த்திருந்த இராணுவம் இவர்களைவிட இரட்டிப்பான பாஸிச அணுகுமுறை கொண்டது. எங்கே உலகில் ஜனநாயகமாக நடந்த ஒரு போராட்டத்தைச் சொல்லுங்கள் பார்க்கலாம். இதனை இவர்களுக்குப் பதியத் துப்பில்லை. சரி புலிகள் சாதிவெறியர்களாக இருந்தமைக்கான ஒரேயொரு ஆதாரத்தை அனோஜன் குழுவால் காட்டமுடியுமா??? ஷோபா சக்தி, அ.மார்க்ஸ் சொல்வது போல இலங்கையில் தனித் தலித் இயக்கத்துக்கான சாத்தியங்களைப் புலிகள் அழித்தவர்களுமல்ல. அல்லது அதன் தேவைப்பாடுகள் 83 இலிருந்து அவசியமற்றே போய்விட்டது. அதற்குக் காரணம் தமிழ்த்தேசிய எழுச்சியேயாகும். தலித் என்ற விவகாரம் தமிழ்த்தேசியத்திற்குள் அமைதிகண்டுவிட்டது. சிங்களத் தீவிரவாத ராணுவம் தமிழர்களை தமிழனாகப் பார்த்துத்தான் அழித்ததே தவிர, இந்த மௌடீகர்கள் சொல்வது போல நீ தலித். நீ வெள்ளாளன். என்று பார்க்கவில்லை.
அனோஜன் குழுவினர் காட்டும் முற்போக்கு உலகம் ஒரு சாரார்க்கானது. அதில் பிரசாத், சுகன், ஷோபாசக்தி அன்ரனிதாசன் முதலானோர் மட்டுமே மாறிமாறித் தம் கருத்துக்களை ஆராதிக்கமுடியும். அதில் குடியிருக்கமுடியும். காசுபார்க்க முடியும்.
ஷோபா சக்தியின் அயோக்கியத்தனமான வழியில் வந்த பிரசாத் தர்மு, அனோஜன் முதலானவர்களின் இலக்கிய-அரசியல் கரசேவைகள் ஏற்கமுடியாதவை. ஆனால் அவர்கள் இலக்கிய ரீதியில் மட்டும் கவனத்துக்குரியவர்கள். அவ்வளவுதான்.
//இங்கு எதிர்ப்பது புலிகளை மாத்திரமல்ல. புலியெதிர்ப்பு என்பது நம் சூழலில் குறியீட்டு ரீதியான அர்த்தம் நிரம்பிய அரசியற் செயற்பாடு. இங்கு எதிர்ப்பு என்பது நம்சூழலில் உள்ள சனநாயக மறுப்பை, விடுதலைப்போரட்டத்தின் பெயரால் நிகழ்த்தப்பட்ட படுகொலைகளை, அதனுள் புரையோடியிருந்த சாதிய, நுண்பாஸிசத் தன்மையை, துரோகிகள் எனச் சொல்லிச் செய்த அழித்தொழிப்பை நியாயப்படுத்துவதை, இஸ்லாமிய வெறுப்பைக் கொண்டலையும் யாழ்ப்பாணிய மனநிலையை எதிர்க்கும் அரசியற் செயற்பாடாகும். புலி / வெள்ளாள / தமிழ்தேசிய மனநிலையின் சிதைவிலிருந்துதான் நம் சூழழில் சிறுபான்மை இனங்களிற்கிடையான அய்க்கியமும், சமத்துவமான வாழ்விற்கான விடுதலைக் கருத்தியலை நாம் கண்டடைய முடியும். அதை நீங்கள் புலி எதிர்ப்பு என்று சுருக்கி பேசுவீர்கள் எனின் எங்களுக்கு ஆட்சேபணை இல்லை//.
-அனோஜனின் கட்டுரைப்பகுதி.
புலி ஆதரவு- புலி எதிர்ப்பு இந்த இரண்டின் வளைவுக்குள் சிக்கிச் சின்னாபின்னமாகத் தொடங்கியுள்ளது ஈழத்தமிழ் இலக்கியம் மட்டுமல்ல. ஒட்டுமொத்த தமிழிலக்கியமும்தான் என்பது துன்பியல் சம்பவமே!!!!. இந்த இடத்தில் சாரு நிவேதிதா ஷோபா சக்தி பற்றி எழுதிய கட்டுரையையும் இணைத்துள்ளேன். இதுதான் இந்தக் கும்பலின் சாராம்சம்.
"ஒரு வன்முறைப் போராட்டத்தை அதன் வரலாற்றுத்தன்மையைப் புரிந்து கொள்ளாமல் வெறும் ஊழல் என்று கொச்சைப்படுத்தி எழுதப்பட்டிருக்கிறது"
-சாருவின் பகுதி.
இதுவே சாரு சொன்னது. இதைத்தான் இன்றுவரையிலும் இவர்கள் செய்கிறார்கள். இந்த இலக்கியப் புரோக்கர்கள் பணி என்பது இதுதான். இவர்களுக்கு ஒரு போராட்டத்தை வரையறுக்கத் துப்பில்லை. நாட்டைவிட்டுத் தப்பியோடிய பின்னர் அங்குள்ள அரசியல் சித்தாந்தங்களை இங்கு புகுத்த நினைக்கும் கேனைத்தனமான அணுகு முறையாகத்தான், இவற்றையும் இவர்களிடமிருந்து வெளிப்படும் அநேகமானவற்றையும் பார்க்கமுடியும்.

Comments

Popular Posts