இந்த நகரத்தில் நகுலன் என்ற பெயரில் யாருமில்லை

ஒரு பிரியமான கூடலுக்கு அப்புறம் அதை இரட்டிக்கிறதுக்கான வழி, அடுத்த கூடுகையை ஒத்திப் போடுறதுதான்.
-ஆத்மார்த்தி.
"இந்த நகரத்தில் நகுலன் என்ற பெயரில் யாருமில்லை" என்ற ஆத்மார்த்தியின் கதையை வாசிக்கும் போது சில இடங்கள் எனக்கு நெருக்கமாகவே இருந்தது. புத்தகம்- பிரயாணம்- நகுலன் என்ற மூன்று புள்ளிகளுக்குள் இக்கதையை உருத்திக் கொட்டலாம்.
ஜெயமோகன், சாரு நிவேதிதா, எஸ்.ராமகிருஷ்ணன், மனுஷ்யபுத்திரன், நகுலன் என்று தமிழின் மிகச்சிறந்த எழுத்தாளர்களைக் கதாபாத்திரங்களுடன் கொண்டு செல்கிறார். சில எழுத்தாளர்களும் படைப்புக்களும் ஆங்காங்கே பட்டியலிடப்படுகிறது. முன்நால்வரையும் விட்டுவிட்டு நகுலனைக் கொண்டே கதையை உச்சத்துக்குக் கொண்டு செல்கிறார்.
தீவிர இலக்கியம்- வெகுஜன இலக்கியம் என்ற இருவேறான மனநிலைகள் முற்பாதியிலும், நகுலன் போன்ற தீவிர இலக்கியவாதி மீதான முக்கியத்துவம் பிற்பாதியிலும் வருகிறது. இடையிடையே தர்க்கங்கள் நிகழ்கிறது. எனக்குள்ள சந்தேகம் இது எந்த வகையான கதை என்பதேதான். இது கதையா அல்லது கதையாக உருவகிக்கப்பட்ட அழகியல் கட்டுரையா என்பதுதான். காலத்தையும் ஞாபகத்தையும் வைத்துக்கொண்டு ஆத்மார்த்தி தரும் விளக்கம் அவரது தத்துவ ஈடுபாடா அல்லது நகுலனின் மீதான ஈடுபாடா என்பது ஒரு சந்தேகமாயுள்ளது. அதற்கு அவர் விளக்கம் தரத்தேவையில்லை. ஏனெனில் அது நகுலனின் தத்துவம் மீதான ஈடுபாடுதான்.
எஸ் சம்பத்தின் இடைவெளி தொடக்கம் தேவதச்சனின் இரண்டு சூரியன் வரையான புஸ்த்தகங்களை எடுத்துக் கொண்டு வெளிநாடு சென்றவன், நகுலனை மறந்து விட்டுப்போனால் அடுக்குமா? வரவர ஆத்மார்த்தி மாதிரி எழுத்தாளர்களுக்கு நகுலனைச் சீண்டுவதே வேலையாகிவிட்டது என்று நினைத்தேன். முடிவில் அதற்காகவே அவர் குட்பை சொல்லி விட்டு நாடேகியதால் அந்தச் சீண்டலின் நியாயம் புரிந்துகொண்டேன்.
ஆக இந்தக் கதை இலக்கியப் பிரியர்கள் அவசியம் வாசிக்கவேண்டியது. நகுலனின் அருமையைத் தெரிந்து கொள்வதற்காகவேனும்!!!, ஆனால் உலகச் சிறுகதை என்று கூறி உசுப்பேத்தி ஆத்மார்த்தியின் கதையுலகத்தை நாசமாக்காதீர்கள்!!!!! தமிழுக்கு நல்ல கதை அவ்வளவுதான்!!!!!

Comments

Popular Posts