தலையற்ற குருவிகள்

யுத்தம் உக்கிரம் பெற்ற காலத்திலும் புலம்பெயர்ந்திருந்த நாட்களிலும் உள்நாட்டுப் போர் முடிவடைந்த போதும்  பிற இனம்மீது வெறுப்பினைப் படரவிடாமல் கவிதைகளை எழுதியவர் கவிஞர் சேரன். கிட்டத்தட்ட மூன்றரை வருடங்களுக்கு முன்பாகச் சேரனின் மீண்டும் கடலுக்கு என்ற தொகுப்பைப் படித்திருந்தேன். அதன் மீதான விமர்சனத்தை ஜீவநதி என்ற இதழுக்கும் எழுதியிருந்தேன். அதுகுறித்து ஒரு பாராட்டையும் சேரன் அப்போது கூறியிருந்தார். அதன் தொடர்ச்சியாகப் பல இலங்கைக் கவிஞர்களின் கவிதைகளைப் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. செட்டை கழற்றும் போதுதான் பாம்பு வளர்ச்சி காணும் என்பது இயல்பான ஒன்று. அது போல அக்காலத்தில் படித்த இலங்கைக் கவிஞர்கள் பலரின் கவிதைகளை விட்டு வந்து, இன்று வேறு வேறு ஆட்களை ரசனைக்கு ஏற்ப வாசிக்க முடிந்தது. அதில் பலரை இன்றைய யதார்த்தத்திலும்  கவிதையின் எனது வாசக மனநிலையிலும் வைத்து நிராகரிக்கும் அளவுக்கு அல்லது இது நான் வாசிக்கும் கவிதையல்ல என்று நிதானிக்கும் வகையில் பிரக்ஞை உண்டாகியுள்ளது என்றும் கூறமுடியும். 





எனது அன்றைய வாசிப்பில் சேரனுடன் அறிமுகமான பலரை இன்று வாசிக்க முடியவில்லை. மிகுந்த அயர்ச்சியைத்தான் அவை தருகிறன. ஆனால் சேரனின் கவிதைகளில் உள்ள நிதானமான சிந்தனைகளும் இயற்கையை உருவகப்படுத்தி யுத்த நிலத்தின் நிகழ்வுகளுடன் இணைத்துக் கூறும் மொழியும் வெகுவாக கவனிக்கப்பட வேண்டியவை.  அவற்றின் தனிப்பண்புகளே இவைதான். இந்த வாசக முகத்துடன் சேரனை அணுகும்போது அவை யதார்த்தத்தை மிகையற்றுச் சித்தரிக்கும் போக்கினைக் கொண்டவை என்று அடையாளம் காணமுடியும். இந்த அடையாளம்தான் அவரை மீளவும் வாசிக்க வைக்கின்றது. இதே போன்ற பாங்கில் சற்று ஆவேசமாகவும் தமிழ்த்தேசியத் தீவிரக் கனவுடனும் கவிதை எழுதியவர் நிலாந்தன். நிலாந்தனின் கவிதைகள் வன்னி நிலத்தைச் சித்தரித்தவை. அவரது "வன்னி மான்மியம்" தொகுப்பு முக்கியத்துவம் வாய்ந்த  ஒன்றாகும். இது பரிசோதனை முயற்சிகளால் ஆனது. அவரது கவிதைகளின் முக்கியத்துவங்கள் பற்றி ஆரம்பத்தில் இரண்டு பதிவுகள் திண்ணையில் எழுதிய ஞாபகமுண்டு. யுத்தகாலத்தின் காதல் நினைவுகளை யுத்தத்தின் கோரத்திலிருந்து  தனிமைப்படுத்தாமல் அதனை இயற்கையின் குறியீடுகளால்  சேர்த்து ஆக்கியமை சேரனின் கவிதைகளில் அவதானிக்கமுடியும்.

"ஆற்றின் இருபுறமும் காத்திருந்தோம்.
காதல் மடிந்துபோன கரைகளில் இனிமையின் 
சுவடுகளைச் சொல்ல இருந்த வெள்ளை மார்புடைய 
மீன்கொத்தி பறந்து போயிற்று.
ஆற்றைத் தொட்டும் தொடாமலும் 
எறிகணையின் வேகத்துடன் 
விரைந்து செல்கிறது 
தலையில்லாக் குருவி.
அதன் சிறகுகள் நீரைத் தொடுகிற 
போதெல்லாம் மின்பொறி தெறிக்கிறது.
சிறுகுருவி பெரும் ஆற்றுத்தீயை மூட்டுகிறது"
அநேகமான இலங்கைக் கவிதைகள் தட்டையான உள்ளடக்கத்துடன்  தமது கவிதைகளைக் கவிதை என்று நிரூபித்தவைதான். ஆனால் இந்தக் கவிதையில் தட்டையான பாகங்களை எங்கும் காணவியலாது. காதல் நொய்ந்துபோன கரைகளில், இனிய  நினைவுகளைச் சொல்ல இருந்த ஒரு பறவையின் நிலமையை விபரிக்கிறார்.  அதில் அதனைக் கூற முனையும் பறவையின் தலையே இல்லாமல் போய்விட்டது. மீன்கொத்தியையும் சிறுகுருவியையும் ஒருநிகழ்வின் தொடர்பாகவே இங்கே நாம் எடுத்துப் பார்க்கவேண்டும்.  'எறிகணை வேகம்' என்பது மானிடப் பேரழிவின் குரூரம் என்றுதான் மேற்கோள் காட்டமுடியும். எறிகணை வேகத்துடன் விரைந்து சென்ற தலையற்ற குருவி ஆற்று நீரைத் தொட்டவுடன் மின்பொறி பறக்கிறது என்று அவ்வரி நிறைவடைகிறது. ஒரு யுத்தத்தின் அனுகூலத்தையும் பிரதிகூலத்தையும் அதில் தொடர்புபடாத ஒரு பறவையே இப்படி அனுபவிக்கிறது என்றால், மக்களின் நிலமை எதுவாயிருக்கும்?. வெள்ளை மார்புடைய மீன்கொத்தி என்பதைச் சமாதானத்தின் குறியீடாகவும் கருதலாம். அல்லது யுத்தநிகழ்வுடன் நேரடியாகச் சம்பந்தப்படாத ஒரு ஜீவனாகவும் கூறலாம். ஏனென்றால் வெள்ளை என்பது பொதுவாக சமாதானத்தின் குறியீடு. அடுத்துவரும் "தலையில்லாக்குருவி" சமாதானத்தின் அழிவினையும் குறிப்பதாக அடையாளப்படுத்தலாம். 



கடைசியாக சிறுகுருவி பெரும் ஆற்றுத் தீயை மூட்டுகிறது என்பது இரண்டு முக்கிய நிகழ்வுகளை வலியுறுத்துகிறது.
1. சமாதானத்தின் அழிவும் மானிடத்துயரமும்.
2. இனங்களின் வெறிப்பற்றுகை.
இவற்றைத் தெளிவாகக் கூறுவதில் சேரனின் நிதானம் எவ்வளவு காத்திரமான பங்கினை வகிக்கின்றது. இக்காலத்தில் வெளிவந்த அநேகமான இலங்கைக் கவிதைகள் துவேசத்தையும் பிற இன வெறுப்பையும் கவிதைக்குள் மூட்டியது. அத்துடன் கொச்சையாக ஒரு இனத்தையும் அவ்வினத்தின் கடவுளரையும் வர்ணித்தது. ஆனால் அந்த மூர்க்கம் இல்லாத ஒரு தெளிந்த மனம் இங்கு வெளிப்பட்டுள்ளது. எங்கள் துயரங்களை உலகுக்கு வெளிப்படுத்த நன்மொழியை நாம் கட்டமைக்க வேண்டும். அதற்குள் ஒரு ஜனநாயகத்தை உருவாக்க வேண்டும். அதனைப் பிறமொழிகளில் பெயர்க்கும்போது எமது ஆத்மார்த்தமான பிரச்சனைகளை அவர்கள் உணரவேண்டும். இனச்சிக்கலிலுள்ள நாம் இன்னொரு இனத்தைத் தாழ்த்தி அவர்களின் கடவுளரைத் தூற்றுவதால் எம்மைப் பிறர் அறிந்துவிடப்போவதில்லை. மாறாக எமது படைப்பூக்கம் வீழ்ச்சி கண்டுபோகும். இந்த முறையைச் சரியாகப் பயன்படுத்தி வெற்றிகண்டவர் சேரன். அவரது அநேக கவிதைகள் ஆங்கிலம், மலையாளம், பிரஞ்சு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அதற்கு அவரது நிதானமான மொழி மட்டுமல்ல கவிதையின் உள்ளடக்கமும்தான் காரணமாகும். அதனால்தான் அன்று வாசித்த சேரன் இன்றும் அதே போல இருக்கிறார் கவிதையில்.



"பிணங்களால் பாலம் அமைத்து ஆற்றைக் கடக்க வேண்டாம்" என்றொரு வரி சேரன் எழுதியதுதான். அண்மையில் முல்லைத்தீவுக்குச் சென்ற போது பெருந்தொகையான மக்கள் கொல்லப்பட்ட வட்டுவாகல் பாலத்தடியில் வைத்து அந்தப் பாலத்தின் தூயரக் கதையைச் சிலர் கூறினார்கள். கீழேயுள்ள பெட்டைக்கடலால் மக்கள் நடந்து செல்லும்போது துப்பாக்கிப் பிரயோகங்கள் இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்டதாம். அப்பொழுது இறக்கும் உடலங்கள் பாலத்தின் கீழும் பாலத்தின் மேலும் சாய்ந்து கிடந்தன. அதனை ஏறி மிதித்தபடிதான் மக்கள் கடந்து போயினர். இந்தத் துயரத்தை அவர்கள் வர்ணிக்கும்போது யுத்தத்தின் கோரம் பல சமயங்களில் சலிக்கவே வைக்கிறது.  இக்கதையைக் கேட்ட பலரின் இனவெறி என்பது அங்கேயே உறைந்தழிந்து போனது என்றும் கூறலாம். எம் அடுத்த சந்ததிக்குத் தமிழைக் கற்றுக்கொடுக்க வேண்டுமா என்ற கேள்வி கூட அங்கே எழுந்தது.  2000களில் எழுதப்பட்ட சேரனின் இந்த வரி அப்பொழுது என் ஞாபகத்தைக் கிளறிக்கொண்டு வந்தது. எத்தனை மக்கள் ஆற்றைக்கடக்க பிணத்தைப் பாலமாக்கியுள்ளனர். அந்தப் பிணங்களில் கடந்தவர்களின் ரத்த உறவுகள் கூட இருந்திருக்கலாம். இதனை வைத்து இன்றும் அரசியல்-இலக்கிய வியாபாரம் செய்பவர்களை நினைத்தால் அருவருப்புத்தான் உண்டாகிறது.  இவற்றைக் கடந்து வரவேண்டிய சூழல் நமக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இன்னும் பிரிவினைவாதத்தை முன்வைத்தபடி இருப்பது தமிழ்ச் சமூகத்தின் சாபக்கேடுதான். பாதிக்கப்பட்ட சமூகத்தின் முன்னகர்வுக்கான பெருந்தடையாக இருப்பவர்கள் இவர்கள் என்று கூறலாம்..

000

சேரனின் கவிதைகள்.

கேள்

கேள்
எப்படிப் புணர்வது என்பதைப்
பாம்புகளிடம். எப்படிப் புலர்வது என்பதைக்
காலையிடம். பொறுமை என்பது என்ன
என்பதை மரங்களிடம். கனவுகளுக்கு
வண்ணங்கள் உண்டா என்பதைத் தூக்கத்தில்
நடப்பவர்களிடம். கண்ணீர்த்துளிகள் சிறைக்கூடங்களாக
மாறியது எப்படி என்பதை
அகதிகளிடம். பயம் என்பது என்ன என்பதை
நடு இரவில் இந்த நகரில் நடக்க நேர்கிற
கறுப்புத் தோல் மனிதர்களிடமும்
பெண்களிடமும். மோகம் முப்பது நாள்கள்தானா
என்பதை மூக்குத்தி அணிந்த காதலர்களிடம்.
முழுநிலவில் பாலத்தின்கீழ் உறைந்த பாற்கடலின்
பாடும் மீன்கள் எங்கே போய்விட்டன
என்பதைக் கார்காலத்திடம். மொழியின்
தனிமையிலிருந்து பிறப்பது என்ன என்பதைத்
திசை தொலையப் புலம்பெயர்நதவர்களிடம்.
துயரத்தின் சாறு பிழிந்த தனிமை எப்படியிருக்கும்
என்பதை என் பனிப்பாறையுள் நெருப்பின்
உயிர்ச் சுவட்டை எறிந்தவனிடம், அவளிடம்
இவளிடம். இரவின் கடைசி ரயிலும் போய்வி்ட்ட
பிற்பாடு ஒற்றைச் சிறகுடன் கையில் ஒற்றைப்
பூவுடன் காத்திருப்பது எப்படி என்பதை
என்னிடம்
கேள்.

சே.யுடனான உறவு முறிந்தபோது

சே.யுடனான உறவு முறிந்தபோது
வெளியில் எறிவதற்கு
ஒரு பெருமூச்சாவது என்னிடம் இருக்கவில்லை

இந்த அறை வாசல் படியை
அவனது கால்கள் தாண்டிய நொடிப்பொழுதிலேயே
அவனது நினைவிலிருந்து
நான் அழிந்து போகிறேன்

‘திறந்து வைக்கப்பட்ட கற்பூரப் பெட்டியிலிருந்து
வெளியேறிய வாசனை போல
நான் விலகி விட்டேன்’
என்று எழுதி வைத்துவிட்டுப்
படுக்கையறைக் கட்டிலின் கீழ்ப்
புதைந்து கொள்கிற துணிவு
யாருக்கு வரும்?

அவனுக்கு. அவனோ
வேட்கையின் விசுவரூபம்
ஆயிரம் கோடி மயிர்க்கால்களிலும்
அன்பு நேசம் இன்னுமின்னுமெனும்
ஆசை கசியும் கவிஞன்
இருக்கும் வரையில் இனியன்.

காதல் கறைப்படுத்திய படுக்கை விரிப்புக்களையும்
சுக்கிலம் தெறித்துச் சிக்குண்ட கூந்தலையும்
வெந்நீரில் தோயவிட்டு
வெளியில் வந்தபோது
அவனுடைய வியர்வைத் துளியையும்
காணவில்லை.

அவன் மல்லாந்து கிடந்த இடத்தில்
குலைந்து போயிருக்கிறது ஒரு கனவு
அவன் நடந்து சென்ற வெளியில்
தெளிவற்ற சில முணுமுணுப்புகள் மிதக்கின்றன :
‘அச்சம் தருகிறது காதல்’
கலவியின் பின்
மெல்லிய, வெட்கங் கெட்ட குரலில்
அவனுடைய வழமையான மந்திரம்.

போய் வா, உடைந்த கண்ணாடித் துண்டே
உனது அச்சம் வேறு
எனது அச்சம் வேறு.

Comments

Popular Posts