Skip to main content

ஜெயமோகனின் முடிவின்மையின் விளிம்பில்

அண்மையில் அரச பணிக்கான பயிற்சியின் போது எங்களைப் பற்றிய சுய அறிமுகம் ஒன்று செய்யவேண்டி ஏற்பட்டது. அதில் ஒவ்வொருவரும் தங்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். எனது கட்டம் வந்ததும் எனது வாழ்வில் பெற்றோருக்குப் பிறகு இரண்டு பேர் முக்கியமானவர்கள், ஒருவர் எனது பழைய காதலி. மற்றவர் ஜெயமோகன் என்று கூறினேன். பழைய காதலி மூலம் பெண்களைப் புரிந்து கொள்ளவும் ஜெயமோகன் மூலம் இலக்கியத்தையும், வாழ்க்கையையும், வெறுமையையும் அனுபவங்களுடன் இணைத்துப் பார்ப்பது எப்படி என்று அறிந்து கொண்டுள்ளேன் என்றும் கூறினேன். பலருக்கு ஜெயமோகன் என்பவர் யார் என்று விளக்கம் கூறவேண்டிய துரதிஷ்டம் அப்போது உருவானது. அவரை ஒரு படைப்பாளி என்றும் விமர்சகர் என்றும் தெளிவுபடுத்திய போது ஏற்படாத தெளிவு, ஜெயமோகன் தமிழ்-மலையாள சினிமாவின் கதையாசிரியர் என்ற பிறகே அவரைப் பற்றித் தேடிப் பார்க்கும் ஆவல் பலருக்கு ஏற்பட்டது. இங்கு குறிப்பிட வேண்டிய முரண் யாதெனில், ஜெயமோகன் தான் சினிமாவில் இயங்குவது வெறுமனே நல்ல தொழில் என்றும் இலக்கியமே தனது வாழ்க்கை இலட்சியம் என்றும் அடிக்கடி கூறி வருகிறார். நம்மில் பலர் ஒருவரது தொழிலை வைத்தே ஒருவரை எடைபோடுகிறோம். அவர்களது வாழ்க்கையின் இலட்சியப் பயணங்களைச் சட்டை செய்வதில்லை என்றே படுகிறது. இதனை ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் சொந்த அனுபவங்களிலிருந்து கண்டடைந்திருப்போம். ஜெயமோகனின் எழுத்துக்களை எனது வாழ்க்கையில் வெற்றிக்கான வெற்றிடம் ஏற்பட்ட காலகட்டத்தில் இருந்த போது வாசிக்கத் தொடங்கினேன். அவநம்பிக்கைகள் சூழ்ந்திருந்த போது ஜெயமோகன் எழுத்துக்களைக் கொண்டு என் சிந்தனைகளை நம்பிக்கையாக்கிக் கொண்டேன். அதனால் அவரை எனது வாழ்க்கையின் தவிர்க்க முடியாதவர் என்று கூறுவதில் எந்தவிதத் தயக்கமும் இருந்ததில்லை. ஜெமோ ஒரு வெகுஜன எழுத்தாளர் அல்ல. கவர்ச்சியான சந்தங்களால் நம்பிக்கை வாசகங்கள் விதைக்கும் கவிஞனுமல்ல. ஆனால் நமக்குள் புதைந்து கிடக்கும் ஆழ்மனச் சிந்தனைகளை உயிரோட்டமாக மீள்கட்டுமானம் செய்ய முற்படுபவர். படைப்பூக்கம் உள்ளவர்கள் வைத்திருக்கவேண்டிய அடிப்படை அறங்களைக் காட்டித்தந்தவர்.  ஜெயமோகன் பற்றி உணர்ச்சிவயப்படாமல் எழுதுவதும் ஜெயமோகன் காட்டிய ஒரு வழிதான் என்றும் கூறலாம்.

எப்போதோ வாசித்த பல கதைகளை திரும்பவும் வாசிப்பதுண்டு. ஜெ எழுதிய படுகை, நதி, போதி போன்ற கதைகளை  இதுவரையிலும் எத்தனை தடவைகள் திரும்பத் திரும்ப வாசித்திருப்பேன் என்று தெரியாது. அப்படி ஒரு கதையைத் திரும்பவும் வாசிக்க நேர்ந்தது. "முடிவின்மையின் விளிம்பில்" என்று 2002 ஆம் ஆண்டு காலம் இதழில் வெளியான ஜெயமோகனின் சிறுகதை முக்கியமான ஒன்று என்றே கூறவேண்டும்.  தொடக்கத்தில் நான் கூறிய சம்பவத்தைப் போல இக்கதையில் பின்வரும் வாசகம் ஒன்றும் இடம்பெறுகிறது. "தமிழில் நான் இரு பெரும் நாவல்களை எழுதியிருக்கிறேன் என்பது ஃபிரெடியை வியப்பிலாழ்த்தியது. ஆனால் வாழ்க்கைச் செலவுக்கு குமாஸ்தா வேலை செய்கிறேன் என்பதைக் கேட்டு அவர் குழம்பிப்போனார்" இது தமிழில் எழுதுபவர்களுக்கு நிகழும் ஒரு துன்பியல் சம்பவம். அதனால்தான் எழுத்தாளர் ஜெயமோகனைத் தெரியாது என்பவர்கள், சினிமா கதையாசிரியர் ஜெயமோகனைத் தெரியும் என்கிறார்கள்.

00

இணையம் மூலம் நட்பான ஒரு அய்ரோப்பிய எழுத்தாளர் ஜெயமோகன் என்ற இன்னொரு எழுத்தாளரிடம் தனது நாவலை வாசிக்க அனுப்புகிறார். அந்த நாவலின் வாசக அனுபவத்தையும் விமர்சனத்தையும் "முடிவின்மையின் விளிம்பில்" என்று புனைகதையாக ஜெயமோகன் எழுதியுள்ளார்.  நாவலை ஒருபோதும் முடிக்க முடியாது. எங்காவது நிறுத்திக்கொள்ள வேண்டியதுதான் என்று கதையின் தொடக்கத்தில் ஜெ எழுதியது இச் சிறுகதையின் நிறைவுக்குப் பொருத்தமாக அமைகின்றது. கதைக்குள் ஒரு உபகதை. அந்த உபகதைக்குள் நகரும்  அய்ரோப்பிய நாவலாசிரியரின் திருப்திதராத பிரதி.  இதற்குள் வெளிப்படுத்தப்படும் அழிவுற்ற அய்ரோப்பியக் குலங்களின் தோற்றுவாய். மற்றும் அதற்குள் காணப்பட்ட முறைதவறிய உறவுகள்.

காதல், பெண்கள், காமம், அய்ரோப்பியப் பௌராணிக மரபு என்று ஒருங்கிணைந்த பகுதியின் அம்சங்களை இந்தக் கதையில் நாம் காணலாம். விஷ்ணுபுரம் பற்றிய அறிமுகமும், மனிதனின் காமம் மூளையில் இருக்கிறது என்று தீவிரமாகக் கூறும் பிறிதொரு ஆக்கத்தைத் தான் இதுவரை வாசித்ததில்லை என்று ஜெ குறிப்பிடுவதும் இங்கு நோக்கத்தக்கது.

அதீனா என்ற பேபியன் குலத்துப் பெண் எழுதிய புராதன காலத்துக் கடிதத்தை, சமகாலத்தில் இருந்து தப்பித்துச் செல்ல எண்ணியுள்ள கிளாரிண்டா என்ற வரலாற்று ஆய்வுப் பெண் ஒருத்தி வாசிக்கிறாள். அந்தக் கடிதத்திற்குள் இடம்பெற்ற காமம் சம்பந்தப்பட்ட விடயங்களால் கிளர்ச்சியடைந்த கிளாரிண்டா நேரடியான காமம் சாத்தியமின்மையால் கற்பனையில் மிதக்கிறாள். நனவிற்கு மீளமுடியாமல் காமத்தில் மூழ்குகிறாள். ஆண்களையும் நெருங்க முடியாமல், பெண்களின் ஓரினப்புணர்ச்சி தொடுகைகளைத் தாங்கவும் முடியாமல், இறுதியில் பெண்களின் கூட்டுப் புணர்ச்சி நிகழ்வுகளைக் கற்பனை செய்தபடி சுய இன்பம் காண்கிறாள் கிளாரிண்டா.  இத்துடன் ப்ரெடி வில்லியம்சன் எழுதிய நாவல் நிறைவு பெறுகிறது. இங்கு ரோமாபுரி புராதனத்துடன் இணைத்துக் குறிப்பிடவேண்டிய விடயம் ஒன்றுள்ளது. சாப்போ என்றொரு ஓரினக்காதலைப் பாடிய கிரேக்கப் பெண் கவிஞர் ஒருவர் இருந்துள்ளார். இவரை மேற்கத்தைய பெண் கவிஞர்களின் முன்னோடி என்று அழைப்பர். இவர் பிறந்த லெஸ்போஸ் என்ற தீவின் பெயரை வைத்துத்தான் லெஸ்பியனிஸம் என்ற சொல் தோன்றியுள்ளது.

இக் கதையின் முதற் தளம் நாவல் பற்றிய வாசக அனுபவமாகவும், அடுத்துவரும்  தளம் ஒரு நாவலாசிரியனின் விமர்சனமாகவும் அமைகிறது.  எடுத்துக்காட்டாக சங்ககாலத்தில் கவிதை பாடும் வழக்கம் இருந்ததே ஒழிய தத்துவ தரிசனங்களின் தீவிர வளர்ச்சி இருக்கவில்லை. அல்லது பிரதிபலிக்கவில்லை. தமிழகத்தில் பௌத்தமும் சமணமும் பரவத் தொடங்கிய பின்பே சங்கமருவியகாலத்தில் தத்துவம் வளர்ச்சி கண்டது. அதுபோலத்தான் இக்கதையில்  அதீனா என்ற பெண் எழுதிய இக்கடிதம் கிறிஸ்த்தவத் துறவியர் மடாலயத்தில் இருந்ததாகவும் அதனைத் தொடர்ந்து வாசித்தவர்கள்
காமம் நீக்கப்பட்டவர்கள் என்றும் பிரெடி கேட்ட கேள்விக்கு ஜெயமோகன் பதிலளிக்கிறார். இங்கு காமம் நீக்கப்பட்டவர்களை தத்துவம் வளராத சங்ககாலத்தவர்கள் என்றும் அதனைக் காமத்தின் இணைப்புடனும் கற்பனையுடனும் வாசித்த கிளாரிண்டாவை சங்கமருவிய காலத்தவர்களுடனும் ஒப்பிடலாம். இது இக்கதையின் தத்துவத்தைப் புரிந்து கொள்வதற்கான  ஒரு எளிய உதாரணம். காமத்தைப் புரிந்து கொள்வதாக இருந்தால் இந்தக் காலகட்டங்களை மாற்றித்தான் பார்க்கவேண்டும். குறிப்பாக 'காமம் அணக்கும் பிணியும் அன்றே' என்று சொன்னவர்களல்லவா சங்ககாலத்தவர்கள்?.

கதையின் இறுதியில் இந்நூலை எழுதியது ஆணா பெண்ணா என்ற விவாதம் முன்வைக்கப்படுகிறது. ஒரு கட்டத்தில் இந்தக் கேள்விக்கான பதிலை ஜெயமோகன் இப்படிச் சொல்கிறார்.

''இது ஆணின் பகற்கனவின் எல்லை மீறல்தான். எல்லைகளை மீறப்போகும்போது அதன் பொறுப்பை ஏற்றுக்கொள்ள நாம் தயாராவதில்லை. காரணம் குற்றவுணர்வு அந்த உத்வேகத்தின் ருசியை இல்லாமலாக்கிவிடும். ஆகவே ஒரு ‘தவிர்க்க முடியாத’ சூழலை ஆண்மனம் கற்பனை செய்கிறது. அந்த எல்லைவரை தன்னைத் துரத்தும் பயங்கரப் பெண்களை அவன் உருவாக்கிக் கொள்கிறான். எல்லா ஆண்களுக்கும் அவர்கள் கனவுகளில் ரத்தம் குடிக்கும் மோகினிகளும், தாகமே அடங்காத பிடாரிகளும் உண்டு. யோசித்துப் பாருங்கள், இந்த நாவல்கூட நாம் பரிமாறிக்கொள்ளும் பகற்கனவு மட்டும்தானே?''

இப்படிக்கூறித் தனது கருத்துக்களை பிரெடிக்கு அனுப்பி வைக்கின்றார் ஜெ. அதற்கான பதிலாகச் சில நாட்களில் பிரெடி "நான் ஒரு ஆண் என்பதை எதை வைத்து முடிவு செய்தாய்?" என்று கேட்கிறார். காமத்தைப் பற்றி ஆண்கள் மட்டும்தான் எழுத வேண்டுமா. அதனைப் பகிர்ந்து கொள்ள பெண்களுக்கு அனுமதி இல்லையா. என்பது போன்ற அழுத்தமான ஒரு வினா முன்வைக்கப்படுகிறது. அதீனா, கிளாரிண்டா போன்ற கதாபாத்திரங்களைக் காமத்தின் குறியீடுகளாகவே நாம் இக்கதையில் காணமுடிகிறது. நேரடியான வெளிப்பாட்டுத் தன்மைக்கு பிரெடி எழுதிய நாவல்தான் அந்தக் குறியீட்டின் புதிரை உடைக்கின்றது. இவையனைத்தையும் ஒன்று திரட்டியதாக ஜெயமோகனின் வாசக அனுபவ வடிவிலான இக்கதை அமைகிறது.
முடிவின்மையின் விளிம்பில் என்ற இக்கதை அடிப்படையில் விஷ்ணுபுரம் என்று ஜெயமோகன் எழுதிய பௌராணிக நெடும்மரபுக் கதைக்கான உலக உதாரணம்தான். சிறுகதையில் வருய் ரோமாபுரியின் குலத்தொடக்கமும் சடங்குகள் அனுஷ்டானம் பெறுவது பற்றிய குறிப்புக்களும் அதையே ஞாபகமூட்டுகிறது. டைட்டஸ் என்ற ஊனமுற்ற பையன் பிற்காலத்தில் கடவுளாகிறான். அந்தப் பையன் தன் சகோதரிகளுடன் உறவுகொண்டு உருவான ரோமாபுரி தலைமுறை பற்றியும் கூறப்படுகிறது. அத்துடன் இதையொட்டி பல புராணக் கதைகளும் உருவாகின்றன. இது உலகம் முழுமைக்கும் பழங்குடி மரபின் வழி உருவான ஒவ்வொரு சமூகத்துக்குமான உதாரணக் கதை. ஆரம்பத்தில் காமம் என்பது முழு நிர்வாணத்துடன் வெளிப்பட்டு நின்றது. அதனையே இக்கதையில் திரும்பத் திரும்பக் கூறியுள்ளார். இதில் அநேகமானவை அய்ரோப்பிய மரபில் உண்மையாக நிகழ்ந்த சம்பவங்கள்.

இந்தியாவில் நாத்திகவாதச் சிந்தனை மரபு வேரூன்றியதும் பல கண்ணியமான புராண மரபுகள் இங்கே கொச்சைப்படுத்தப்பட்டன. குறிப்பாக இந்து புராணக் கதைகளும் தொன்மங்களும் எள்ளி நகையாடப்பட்டன. இவை ஒரு வகையான மனப்பிறழ்வு என்றுதான் கூறவேண்டும். ஜெயமோகனின் "முடிவின்மையின் விளிம்பில்" என்ற இக்கதை என்னைப் பொறுத்த வரையில் இந்தியப் பௌராணிக மரபின் வரலாற்றை மீள வாசித்து அதன் கண்ணியங்களை அய்ரோப்பிய  மரபுகளுடனும் காமம் சார்ந்த பின்னணியுடனும் வாசித்து எது அதன் தளத்தில் உயரிய சிந்தனையை வழங்கியுள்ளது என்று அறிவதற்கான ஒரு திறவுகோல் என்று கூறலாம்.

00

Comments

Popular posts from this blog

ஆர்.எஸ்.எஸ்: அடிப்படைப் புரிதல்கள்.

கேஷவ பலிராம் ஹெட்கேவர் தனது நண்பர்களுடன் 1925 ஆம் ஆண்டு இந்த அமைப்பை (Rashtriya Swayamsevak Sangh- RSS) ஆரம்பித்தபோது மிகக் கணிசமான அளவு மக்களின் ஆதரவே இவர்களுக்குக் கிடைத்தது.  பெருமளவு மக்களுக்கு ஆர்.எஸ்.எஸ் பற்றிய பிரக்ஞையே இல்லாமல் இருந்தது. பின்னர் முஸ்லிம் அடிப்படைவாதம் தலைதூக்கத் தொடங்கியதும் இந்தியாவின் அநேக பாகங்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தேவை உணரப்படலாயிற்று. அத்துடன் வட இந்தியாவில் சாதிய வேற்றுமையை இல்லாது ஒழிப்பதற்கு இந்த அமைப்பு மேற்கொண்ட செயற்பாடுகள் மிகக் குறிப்பிடத்தக்க முயற்சிகளாகும். இதனால் இரண்டு தசாப்தங்களுக்கு உள்ளாகவே வட இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் பெரும் செல்வாக்குடன் வளர்ந்தது.  இதனை மகாத்மா காந்திகூட தனது ஹரியான் என்ற பத்திரிகையில் பாராட்டி எழுதியிருப்பார். பிற்காலத்தில் நடந்த காந்தி கொலை துன்பியல் சம்பவமாகிப்போனது. ஆர்.எஸ்.எஸ் தடைசெய்யப்பட்டு மீளவும் சமூக எழுச்சிக்காகக் கட்டமைக்கப்பட்டது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் தீண்டாமையை நேரடியாகவே நீக்குவதற்கான முயற்சிகளில் இறங்கினார்கள். இதன் பலனை ஆர்.எஸ்.எஸ் இன்று அந்த இடங்களில் அனுபவிக்கிறது. அங்குள்ள இடதுசாரிக…

இலங்கையின் மதமாற்றங்களும் அரவிந்தன் நீலகண்டனின் உடையும் இந்தியாவும்

அரவிந்தன் நீலகண்டனின் கட்டுரைகளை அவருடைய வலைத்தளத்தில் படித்துள்ளேன். அத்துடன் அவரது இந்திய அறிதல் முறைகள், பஞ்சம் படுகொலை கம்யூனிசம் மற்றும் ஆழி பெரிது போன்ற நூல்கள் மீள்வாசிப்புக்கு உட்படுத்தவேண்டிய நிலையிலுள்ளது. பலர் சொன்னார்கள் இந்து மதத்துக்கும் இந்துத்துவத்துக்கும் வித்தியாசம் உங்களுக்குத் தெரியவில்லை என்று. இந்து மதம் என்பதை மதச்சார்பின்மை என்று பலர் மடைமாற்றி வைத்துள்ளனர் என்பது ஒரு பக்கம் உண்மையாக உள்ளது.  அத்துடன் இந்துத்துவம் என்பது இந்துவாக வாழ்தல் (Hinduness) என்று பொருள். இந்த மடைமாற்றத்துக்கும் பன்னெடுங்கால இந்துமதத்தை அழிக்க முனையும் அந்நிய சக்திகளை எதிர்கொள்ள உருவானதே இந்துத்துவம் என்ற கோட்பாடு என்பது அநேகமான இந்துத்துவர்களின் நிலைப்பாடு. இதற்குள்ளிருந்து புடைத்தெழும் இந்துத்துவ வெறியைத்தான் பலர் இந்துத்துவம் என்று இங்கே தவறாக வகுக்கின்றனர். அதனால் தம்மைப் பலர் இந்துத்துவர் என்று சொல்லவே பின்வாங்குகின்றனர். ஆனால் அரவிந்தன் நீலகண்டன் தன்னை வெளிப்படையாகவே இந்துத்துவர் என்று அறிவித்துக் கொண்டவர்.  அவருடைய கோணத்திலும் வாசிப்பனுபத்திலும் வைத்து நோக்கினால் அதில் தவறுகள் இ…

இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் ஒரு பார்வை

இந்து மதம் என்பது சாதியப் பிரிவால் மட்டுமே வலுப்பெற்றுள்ளது என்ற வலுவான கோஷம் அண்மைக்காலமாக உண்டாக்கப்பட்டுள்ளது. அதனைப் பிரச்சார நோக்கில் பலர் கொண்டு செல்கின்றனர். அடிமைத்தனத்தை வலியுறுத்திய ஹேகல் முதலியவர்களை இங்கே பெரிய இடத்தில் வைத்திருக்கும் இடதுசாரிகளும் திராவிடச் சிந்தனையாளர்களும் அரசியல் காரணங்களுக்காக இந்து மதத்தை மிக ஆழமாக இழிவுபடுத்துவதைக் காணமுடிகிறது. இதனால் இந்து ஞான மரபு என்பது மிக ஆழமாகப் பாதிக்கப்படுகிறது. அண்மையில் ஒரு தமிழ் டயஸ்போரா கூறினார் இந்துஞான மரபு என்பதே ஒரு போலியான கட்டுக்கதை என்று. அவர் எதற்காக அந்த வாதத்தை முன்வைக்கிறார் என்று ஆழமாக யோசித்துப் பேசும் பேச்சைக் கொண்டு பார்த்ததும் புரிந்து கொள்ள முடிந்தது. இலங்கையில் இந்திய அமைதிப்படையினர் மேற்கொண்ட அட்டூழியங்களுக்கு அவர் முகம் கொடுத்துள்ளார். அப்பபோது குடும்பத்துடன் புலம்பெயர்ந்து அய்ரோப்பா சென்றுள்ளார். அதனால் இந்திய மரபும் இந்து மதமும் வீணானவை என்ற கருத்தினைத் தனக்குள் போட்டுவைத்துள்ளார். எப்போதும் முன் முடிபுகளுடன் உரையாடுகிறார். இதைத்தான் பல தசாப்தங்களாக இங்குள்ள பலர் செய்து வருகின்றனர். இது ஒருசில கால…

போகன் சங்கரின் கண்ணாடி போட்ட பூனைக்குட்டிகள். 01.

கவிதைகள் படித்து நீண்ட நாட்களாகிவிட்டது. கவிதைகள் எழுதிப் பல மாதங்கள் ஆகிவிட்டது. கவிதை எழுதுவதே தீண்டாமை போலப்  பார்க்கப்படுகிறது என்பதால் கவிதை எழுதுவது பற்றி எனக்குள் இருந்த இயலுமை கொஞ்சம் கொஞ்சமாக நீர்த்துப் போய்விட்டது என்றே சொல்லுவேன். ஒரு காலத்தில் கவிதை எழுதிக்கொண்டிருந்த நான்கூடத் தீண்டாமையில் இருந்து மீண்டு வந்துவிட்டேன் என்று புழகாங்கிதமடைந்ததுண்டு. ஆனால் உண்மையில் தீண்டாமையை முற்றாக ஒழிக்க முடிவதில்லைத்தானே. வெறும் வார்த்தைகள்தானே. அதுபோலத்தான் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் மோசமான கவிதை எழுதும் கவிஞனையும் முற்றாக நீக்க முடிவதில்லை. நான் மோசமான கவிஞன் என்று எனக்கு ஒரு விமர்சனம் போட்டுப் பார்த்துவிட்டு நிரந்தரமாக விமர்சனத் துறையைத் தெரிவு செய்தேன். அதன் பிறகு கவிதைகள் வாசிப்பதைக் குறைத்துவிட்டுப் புனைகதைகள் மீதும் அல்புனைவுகள் மீதும் கவனஞ்செலுத்தினேன். ஆனால் முற்றிலுமாகக் கவிதைகள் வாசிப்பதை நிறுத்தவில்லை. ஜெ.பிரான்சிஸ் கிருபா, தேவதச்சன், ரமேஷ் பிரேம், சுகுமாரன், நகுலன், பிரமிள், எம்.யுவன் மற்றும் கே.சச்சிதானந்தன் முதலானோரின் கவிதைகளை இடையறாது வாசித்து வந்துள்ளேன். இந்த…

சங்ககாலத்து இராமன்: சில குறிப்புகள்

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் இந்துக் கடவுளரில் ஒருவரான ராமன் பற்றிய குறிப்புக்களை  கடுவன் மள்ளனார் என்றொரு புலவர் எழுதியுள்ளார். முதல் மூன்று நூற்றாண்டின் நடுப்பகுதியில் எழுதப்பட்ட அகநானூற்றிலேயே இந்தக் குறிப்புகள் தெளிவாக உள்ளன.

"வென்வேல் கவுரியர் தொன்முது கோடி 
முழங்கு இரும் பௌவம் இரங்கும் 
முன் துறை வெல்போர் இராமன் 
அருமறைக்கு அவித்த பல்வீழ் ஆலம் போல 
ஒலி அவிந்தன்று இவ் அழுங்கல் ஊரே"

இங்கே கவுரியர் என்பது பாண்டியரையும் கோடி என்பது தென்னகத்துத் தனுஷ் கோடியையும் குறிக்கிறது. இப்பாடலின் பொருளாக, ராமன் வெற்றிபெற்றுப் பாண்டியரின் தேசத்துக்கு வந்தடைந்து ஆலமரத்தடியில் அமர்ந்து மறைஞானப் பாடல்களை ஓதுகிறான். அம்மரத்தின் மேலிருந்த பறவைகள் தமது சப்தங்களை விட்டுவிட்டு ராமனின் மறையோதலைக் கேட்டபடியுள்ளன. இது கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட அகநானூற்றில் மள்ளனார் பாடிய ஒரு பாடல்.

சமகாலத்தில் ஒருவர் தனது சுய கருத்தைக் கூறுவதற்கு இணையத்தின் செல்வாக்கை  அதிகமாக நம்பியுள்ளார். இந்த ஆதிக்கம் அதிகரிக்கத் தொடங்கியதும் எவ்வித வரலாற்று வாசிப்பு அறிவுமற்ற அதே வேளை…

இலங்கையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை வலுப்படுத்துதல்.

பொதுவாக நாம் திட்டமிட்ட சிங்கள-பௌத்த குடியேற்றங்களைப் பற்றிப் பேசுகிறோம். ஆனால் பேரினவாத நிழலில் நின்றுகொண்டு அத்துமீறிய முஸ்லிம் குடியேற்றங்கள் தொடர்ந்து தமிழ்ப் பகுதிகளில் நடைபெறுகிறது. இது பற்றி யாரும் பேசுவதில்லையே. ஏன்?. யாராவது ஒரே மொழி பேசும் ஒரே இனத்தவர்கள் நாம் என்று கூறினால் அதைச் சரியான முட்டாள்த்தனம் என்றுதான் கூறுவேன். அதனை எந்த ஒரு முஸ்லிமும் தமிழரும் ஏற்கப்போவதில்லை. இலங்கையில் இருப்பது மூன்று பிரதான இனங்களாகும். அதில் முஸ்லிம் இனமும் ஒன்று. தமிழக முஸ்லிம்களின் அதிகார நிலைப்பாடுகளுடன் வைத்து இலங்கை முஸ்லிம் அதிகாரத் தளத்தைப் பார்ப்பவர்களே அதிகம். இலங்கையின் அதிக விழுக்காடு முஸ்லிம் அதிகார மையம் அடிப்படைவாத மதப் பரப்புகையை நோக்காகக் கொண்டது. நலிந்த இனத்தை நசுக்குவதைக் கடப்பாடாகக் கொண்டது.


இலங்கையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் துணை அமைப்பான "சேவா பாரதி" என்று யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்குச் சேவை செய்யும் அமைப்பு ஒன்று வடகிழக்கில் இயங்கிவருகிறது. இதற்கு அரச அனுசரணை பெருமளவில் உள்ளது. இதன் பிரதான பணி மதமாற்றங்களைத் தடுத்து யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் …

போகன் சங்கரின் கண்ணாடி போட்ட பூனைக்குட்டிகள் 02

பெண் ஒரு சமூகத்தின் இனப்பெருக்கத்துக்குப் பெரிதும் பங்காற்றுபவள். இது வெறுமனே இனப்பெருக்கத்துக்கு என்ற கருத்தை இங்கே முன்வைக்கவில்லை. இங்கு கவிதை பற்றி உரையாடுகையில் சில ஆதாயங்கள் விடுபட்டே பேசப்படும். போகனின் கவிதையைப் பற்றிப் பேசும் போது பல இடங்களில் பெண்கள் பற்றி மலினமாக எழுதுகிறார் என்ற வாதத்தைச் சிலர் முன்வைத்துள்ளனர். அது அவர்களது வாசிப்பில் உள்ள குறைபாடு என்றே கூறவேண்டும். அல்லது கவிதையை மேலோட்டமாகப் புரிந்து கொண்டதால் உருவான அதிருப்தி என்றும் கூறலாம்.

"கால்களுக்கு நடுவே
ஒரு சிறிய முரசுபோல
துடித்த சிசுவை
ஒரு கிழங்கைக் கெல்லி எறிவது போல
ஒரு பெரிய இடுக்கியைக் கொண்டு
பிடுங்கி எறிகிறாள்
டாக்டர் மாலதி
ஆண்குழந்தை என்று
வெளியே நிற்பவர்களிடம் சொல்கிறாள்
அவளுக்கு ஒரு புன்னகையும்
இனிப்பும் தரப்படுகிறது.

வெளியே வந்ததும்
வீட்டிலிருந்து வந்த ஒரு அழைப்புக்கு
ஆத்திரமாய் எதுவோ போனில் பேசுகிறாள்
இறுகிய  தாடையுடன் அவள்
காரை எடுத்த வேகம் கண்டு
புறாக்கள் சிதறி ஓடுகின்றன.
தூமைக்கால யோனி போல
சிவந்த அந்த அதிகாலையில்
அவள் மிக வேகமாகச் சென்று
அந்த பெரிய வாகனத்தின்
பின்னால் மோதுகிறாள்.

அதீத களைப்ப…